சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயமாக்க இடமளிக்க முடியாது – ரணில்

302 0

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் நாடு தற்போது கண்டுவரும் வெற்றிகள் அனைத்தும் 19 ஆம் சீர்த்திருத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் சுயாதீனமான நீதிதுறையின் செயற்பாட்டை மீண்டும் அரசியல்வாதிகளின் நலன்களுக்கு பயன்படுத்தி கொள்ள இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு எவராது தடையாக இருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாலிகாவத்தையில் நிர்மானிக்கப்பட்டுள்ள ‘லக்ஹிரு செவன” வீடமைப்பு கட்டிடத்தொகுதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய காலக்கட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் அளவினை ஓரளவு கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தோம்.

தொடர்புப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியப்போது நம்பிக்கையுடைய சுயாதீனமான நீதிமன்றமொன்றினை உருவாக்கி கொடுக்குமாறே என்னிடம் வேண்டுக்கோள் விடுத்தனர். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உயிர் அச்சுருத்தல் விடுக்க கூடிய நிலைமைகள் உருவாகும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பக்கச்சார்பின்றி செயற்படுவதற்கான சூழ்நிலைகளை பொலிஸாருக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பக்கச்சார்பின்றி செயற்ப்பட கூடிய திறமையான அதிகாரிகளை நியமிக்குமாறும் கோரியிருந்தனர். அதிகாரிகளை சுதந்திரமாக செயற்ப்படுவதற்கான வாய்ப்புக்களும் நீதி துறையின் சுயாதீன தன்மையும் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றக்கொடுக்க  முடியும்.

அதற்கினங்கவே சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அதற்கென பொலிஸ் பிரிவினால் பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோன்று பொலிஸாரின் பதவி உயர்விலும் பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பதவி உயர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெரும் இதுபோன்ற நியாயமற்ற செயற்பாடுகள் சிறந்த பொலிஸ் அதிகாரிகளை இனங்காண்பதிலும் சிக்கலை ஏற்படுத்தியது.

பொலிஸ் பிரிவில் காணப்பட்ட இது போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு பொலிஸ் ஆணைக்குழுவினூடாக தீர்வுகளை பெற்றுக்கொண்டோம். அதேபோன்று நீதி மன்றத்தின் சுயாதீன தன்மையினூடாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புக்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

மேலும் பொலிசாருக்கான வெளிநாடுகளினூடாக விசேட பொலிஸ் பயிற்சிகளும் பெற்றுக்கொடுப்பட்டன. இவ்வாறான பாரிய செயற்பாடுகளினூடாகவே ஒவ்வொரு நாளும் போதைபொருள் விற்பனையாளர்களை கைது செய்யும் அளவு அதிகரித்தது.

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகளை அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்ள இடமளிக்க முடியாது. குறைபாடுகள் இருப்பினும் அதனை திருத்திக்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்லவே முயற்சிக்க வேண்டும்.

அதைவிடுத்து தற்போது உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை இழந்துவிடக்கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளங்காணும் போது எவராவது அதற்கு எதிராக செயற்படுவார்களானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

நீதிதுறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தபோது கட்சி பேதமின்றி அனைவரும் ஒருமித்து செயற்ப்பட்டே தற்போது சிறந்த நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளோம். 19 ஆம் சீர்த்திருத்தால் பெற்றுக்கொடுப்பதாக கூறிய அனைத்து விடயங்களையும் இன்று மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை வழிநடத்த இடமளிக்க போவதில்லை. 

Leave a comment