கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள்.
ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு அஞ்சலி செலுத்தப்பட்டமை என்பது 2009ற்குப் பின்னரான இந்திய ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அவரவர் அரசியல் சமூக நோக்கு நிலைகளிலிருந்து ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்குள்ள ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் அவரைப் புகழ்ந்து அஞ்சலித்தார்கள். அதே சமயம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சனத்தோடு அணுகும் தரப்புக்களும் ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு உரிய மதிப்பைக் கொடுத்து அதே சமயம் விமர்சித்து அஞ்சலி செலுத்தினர்.இதில் குறிப்பாக முகநூற் பரப்பில் காணப்பட்ட அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளின் தொகுப்பு வருமாறு.
புலமையாளரும் சமூக அரசியற் செயற்பாட்டாளருமாகிய பேராசிரியர் ஆ.மார்க்ஸ் பின்வருமாறு கூறியிருக்கிறார்…….’எனக்கு அவருடன் ஒரு அனுபவம் உண்டு. 90களில் நிறப்பிரிகை குழுவினராகிய நாங்கள் பல ஈழ ஆதரவு சிறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து திருச்சியில் ‘புலம் பெயர்ந்த தமிழர் மாநாட்டை’ நடத்தினோம். அதில் பங்கேற்று ஈழத் தமிழ் ஏதிலியர்களுக்கான உரிமைகளை ஆதரித்துப் பேசியவர்களில் கெய்ல் ஓம்வேத், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஆகியோரும் இருந்தனர். எந்த நிதி உதவியும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் நடத்திய அந்தப் பெரிய மாநாட்டிற்கு அவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்து வந்தோம்.
எல்லோருக்கும் போடப்பட்டிருந்த ஒரு எளிய ஓட்டல் அறையில் தங்க வைத்தோம். அவருக்கு பயணப்படி என ஒரு குறைந்த தொகையை கவரில் போட்டு சற்றுக் கூச்சத்துடன் நீட்டினேன். அப்போது திருச்சியில் இருந்த ராஜன் குறையும் இருந்தார். ‘ஓ! அதெல்லாம் வேண்டாம். எனக்கு இலவச டிக்கட் வசதியெல்லாம் உண்டு. நீங்கள்தான் தங்கும் வசதியெல்லாம் செய்து தந்துவிட்டீர்கள்ர்களே.. இட்ஸ் ஆல்ரைட்… தாங்க்யூ…’ – என அவர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்து கண்களைக் கலங்க வைக்கிறது’
பி.பி.ஸி தமிழோசையில் பணிபுரிந்த ஊடகவியலாளர் எல்.ஆர்.ஜெகதீசன் ஜோர்ஜ் பெர்னான்டசை ‘வடநாட்டு வை.கோ’ என்று அழைக்கிறார். அவருடைய விமர்சனம் கலந்த அஞ்சலிக் குறிப்பின் ஒரு பகுதி வருமாறு………’தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார வலிமையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டையும் அதன் ஏழுகோடி தமிழ்மக்களையும் உண்மையிலேயே மதித்த, உளமாற நேசித்த வட இந்திய அரசியல் ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய மிகச்சிலர் வி பி சிங், பர்னாலா மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அதில் எஞ்சியிருந்த ஒற்றை மனிதரும் இன்று மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்திதான். பெர்ணாண்டஸின் அரசியலும் நம்மூர் வைகோ அரசியலைப்போன்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பால் உருவாகி பின்னர் திசைமாறி எங்கோ போய் எதிலோ முடிந்த அரசியல் பயணம். தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வடஇந்திய ஆளுமையும் மறைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை வட இந்திய ஆளுமைகளில் அப்படியானவர்கள் யார் என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்’
ஏறக்குறைய ஜெகதீசனைப் போலவே மற்றொரு சமூகச் செயற்பாட்டாளாராகிய கறுப்பு நீலகண்டனும் ஃபெர்னாண்டசை விமர்சனத்தோடு பின்வருமாறு அஞ்சலித்திருந்தார்……’ஒரு சோனியா காந்தி விதவையானதற்காக லட்சக்கணக்கனக்கானோர் இலங்கையில் விதவையாக வேண்டுமா?’ என சென்னை கடற்கரையில் நடைபெற்ற மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் அவர் கேட்ட தார்மீகமான மனிதார்த்தமான கேள்வி குஜராத் படுகொலை செய்த, முஸ்லீம்களை கேட்பாரின்றி கொலை செய்த இந்து பயங்கரவாதிகளை ஆதரித்தபோதே செத்துப்போனது…’
மற்றொரு அரசியற் செயற்பாட்டாளராகிய ஆழி செந்தில்நாதன்…….’ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர். சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த இராமேஸ்வரம் கோதண்டராம கோவில் அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர்.’ என்று எழுதியுள்ளார்.
மேற்கண்ட பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புக்களில் ஃபெர்னான்டஸை விமர்சிப்பவர்கள் கூட அவரை மதித்து அஞ்சலி செலுத்துமளவிற்கு அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது என்பதே இங்கு முக்கியமானது. அவருக்கு அஞ்சலி செலுத்திய வை.கோவும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள். அவருடைய வீடு எப்பொழுதும் அகதிகளுக்காகத் திறக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பர்மிய தீபெத்திய அகதிகள் அவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் அவருடைய வீட்டில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். தமிழகம் ஈழம் உள்ளடங்கலான பெருந்தமிழ்ப் பரப்பில் மதிப்போடு அஞ்சலிக்கப்படும் அளவிற்கு ஃபெர்னாண்டசின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
இதில் குறிப்பாக தமிழக மற்றும் ஈழச்செயற்பாட்டாளர்கள் ஃபெர்னான்டசுக்கு செலுத்திய அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றில் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் காணப்பட்டதற்காகப் போற்றப்படுவதைக் காணலாம். 1998ல் பெர்னாண்டஸ் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இடைமறிக்க வேண்டாம் என்று இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டதாகவும் இதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்று ஆயுதக்கப்பல்கள் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும் சநனகைக.உழஅ இணையத்தளம் எழுதியுள்ளது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ஒரு பாதுகாப்பு அமைச்சராக அவர் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு வெளியே வந்து ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்? அல்லது எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்க முடியும்? என்பதுதான்.
அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்னி மைய எழுச்சிக் காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை. வன்னியை மையமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படத் தொடங்கிய பின் அது யுத்தகளத்தில் பெரு வெற்றிகளைப் பெற்ற ஒரு காலகட்டம் இதுவாகும். இக்காலகட்டத்திலேயே அந்த இயக்கத்தின் மரபு ரீதியிலான படையணிகள் உலகத்தின் படைத்துறை வல்லுனர்களின் கவனிப்பைப் பெற்றன. அப்படையணிகளின் யுத்தகள சாதனைகள் வன்னியை ஓர் அதிகார மையமாக கட்டியெழுப்பின. அதன் விளைவே இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.
எனவே புலிகள் இயக்கத்தின் வன்னி மையக் காலகட்டத்தின் பேரெழுச்சிக் காலம் என்றழைக்கப்படும் காலமும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை என்பதனால் விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்ற வெற்றிகளோடு ஜோர்ஜ் ஃபெர்னான்டசைத் தொடர்புபடுத்தி சிலர் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக்கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் ஒரு தனி மனிதனின் நல்லிதயம் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்? ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ஃபெர்னான்டஸ் வழங்கிய ஆதரவு ஒரு தார்மீக ஆதரவா? அல்லது இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார் கொள்கைகளில் நெகிழ்வை ஏற்படுத்திய ஓர் ஆதரவா?
இக்கேள்விகளுக்கு விடை கூறவல்ல மிகச்சிலரே இப்பொழுது இப்பூமியில் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக வழங்கற் செயற்பாட்டிற்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனைப் போன்றவர்கள் வாயைத் திறக்கும் பொழுதே இது தொடர்பான உண்மைகள் வெளிவரும். அதுவரை ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் ஈழத்தமிழர்களுக்கு என்றென்றும் தமது தார்மீக ஆதரவை வழங்கினார் என்பதே இப்போதைக்கு உண்மையானதாகும். 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி ரெட்டிவ் – rediff.com இணையத்தளம் இதுதொடர்பாக எழுதியுள்ளது
1997ஆம் ஆண்டு பெர்னாண்டஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டில்லியில் ஒரு மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அதற்கு உட்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்தபடியால் பெர்னாண்டஸ் அந்த மாநாட்டை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தினார.; அம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் ‘தமிழீழம் தொடர்பாக இந்தியப் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதும்; அப்போராட்டத்தில் அவர்களைப் பங்காளிகள் ஆக்குவதும்தான.; ஏனெனில் அந்தப் போராட்டம் நீதியானது’ என்று பெர்னாண்டஸ் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
அக்காலகட்டத்தில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் ஒன்று முன்னாள் ஸ்றீலங்க ராஜதந்திரி ஆகிய கல்யானந்த கொடகேயை மேற்கோள்காட்டி இருந்தது. ‘எல.ரி.ரி.க்கும் ஃபெர்னாண்டஸிற்கும் இடையிலான சரசம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலானது’ என்று கொடகே தெரிவித்திருந்தார். பாதுகாப்பு அமைச்சர்; ஃபெர்னாண்டஸ் தமிழ் மக்களுக்கு கதாநாயகனாக இருக்கலாம் ஆனால் கொழும்பிற்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அவர் ஒரு வில்லனாகவே இருக்கிறார் என்று ஸ்றீலங்கா அரசாங்கம் கூறியதாகத் தோன்றுகிறது’ என்று rediff.com இணையத்தளம் எழுதியுள்ளது.
ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் ஒரு தனி மனிதனாக அதுவும் வட இந்தியத் தலைவராக அவர் வழங்கிய ஆதரவை ஈழத்தமிழர்கள் எந்தளவிற்கு ஒரு கட்டமைப்பு சார் ஆதரவுத் தளமாக கட்டியெழுப்பினார்கள்? என்பதுதான். இக்கேள்வி எம்.ஜி.ஆரின் விடயத்திலும் பொருந்தும். தனிப்பட்ட நட்பும் நேசமும் புரிந்துணர்வும் தார்மீக ஆதரவும் வேறு. அதை நிறுவனமயப்படுத்தி ஒரு கட்டமைப்பு சார் செயற்பாடாக மாற்றுவது வேறு. இந்தியாவில் ஈழத்தமிழ் லொபி எனப்படுவது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? அதில் பெற்ற அடைவுகள் எவை? விட்ட பிழைகள் எவை? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.
தமிழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்திய மாநிலத் தலைநகரங்களிலும் தமிழ் லொபி எவ்வாறு செயற்பட்டது? அது நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாடாக இருந்ததா? அல்லது பெருமளவிற்கு தனிநபர்களில் தங்கியிருந்ததா? 2009ற்கு முன் அது எப்படிச் செயற்பட்டது? 2009ற்குப் பின்னிருந்து அது எப்படிச் செயற்பட்டு வருகின்றது? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமிழகத்திற்கு வெளியே எத்தனை இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன? தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுமுள்ள எத்தனை மனித உரிமை அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு வெளியே சிவில் சமூகங்கள் செயற்பாட்டு இயக்கங்கள் என்று கருதத்தக்க அமைப்புக்கள் எத்தனை அதை ஓர் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன?
ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் மகத்தானது. அது ஓர் அரசியல் தீர்மானம். அதற்குமப்பால் அது தமிழகத்தில் ஒரு பொதுசன அபிப்பிராயமாக திரட்டப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு வெளியே ஏனைய மாநிலங்களில் அது ஒரு பொதுசன அபிப்பிராயமாக அல்லது சிவில் சமூகங்களின் அபிப்பிராயமாக அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைச் செயற்பாட்டாளரின் அபிப்பிராயமாக திரட்சியுற்றுள்ளதா? ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ், எம்.ஜி.ஆர், நெடுமாறன், வை.கோ, தொல் திருமாவளவன், சீமான் போன்ற நட்பு சக்திகளை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஏன் ஒரு கட்டமைப்பாக நிறுவனமயப்படுத்த முடியவில்லை?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணவல்ல தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வுப் பார்வை தேவை. ஈழ-தமிழக உறவெனப்படுவது அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. ஆனால் அது எவ்வளவிற்கு எவ்வளவு அறிவுபூர்வமானதாக மாற்றப்படுகிறதோ அவ்வளவிற்கவ்வளவு பிராந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் வெற்றிகரமாகச் சுழியோட முடியும். அதைப் போலவே புதுடில்லியும் உட்பட ஏனைய மாநிலங்களை எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பில் ஈழத் தமிழர்களிடம் ஒரு கட்டமைப்பு சார் அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம். கற்பனைகளோடும் முற்கற்பிதங்களோடும் முடிந்த முடிபுகளோடும் பிராந்திய உறவுகளை மட்டுமல்ல அனைத்துலக உறவுகளையும் அணுக முடியாது. எனவே இதுவிடயத்தில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற பொருத்தமான ஆய்வொழுக்கங்களைக் கொண்ட சிந்தனைக் குழாம்களை ஈழத்தமிழர்கள் முதலில் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் அரசுடைய தரப்புக்களோடும், சிவில் அமைப்புக்களோடும் உலகளாவிய நிறுவனங்களோடும் இடையூடாடுவதற்குரிய பொருத்தமான சமயோசிதமான தீர்க்கதரிசனமிக்க ஒரு பொறிமுறையைக் கண்டுபிடிக்காதவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு வெளியே சிந்திப்பது என்பது முழுக்க முழுக்கக் கற்பனையே.
நிலாந்தன்