தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் , ஹட்டனில் போராட்டம்

268 0

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி ஹட்டன் சிவில் அமைப்புகள் ஒன்று கூடி ஹட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கவனயீர்ப்பு  நடவடிக்கையில் இன்று காலை ஈடுப்பட்டனர்.

இதன்போது பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையை ஹட்டன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் முன்னெடுத்தனர்.

கடந்த மாதம்  28 அம் திகதியன்று ஹட்டன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தன் உயிரை  மாய்த்து கொண்ட தாதி தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவியே காரணம் என தனது பெற்றோருக்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை.

அதேநேரத்தில் ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதணை, மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த  தாதியின் மரணம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த தாதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நீதிபதியின் கவனத்திற்கு  கொண்டுவரும் வகையில் நீதிபதி நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பதாக இதில் கலந்து கொண்டுள்ள சிவில் அமைப்புகள் தெரிவித்தன.

Leave a comment