ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் – பழ.நெடுமாறன்

360 0

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.

இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.

இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குள் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார். 

Leave a comment