ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை மறந்து விட்டார். அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தை நான் அவரிடம் சமர்ப்பிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்ககளப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன், பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அவரது அமைச்சின் 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாடசாலை வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் எலலோரும் இணைந்து உருவாக்கிய அரசாங்கமாகவே உள்ளது. ஜனாதிபதிக்கும் இங்குள்ள மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த காரணத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமராக இருக்கின்றார். ஆகவே அவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டை பிடிப்பதாக இருந்தாலும் அவர்களுக்குள் முறுகல் இருந்தாலும் அது அவர்களுடைய விடயம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் மீறமுடியாது. இதனை நான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு தெரிவித்துக் கொள்கின்றேன். நான் முடி மறைத்து பேசுபவன் அல்ல. நேரடியாக பேசுபவன். இங்கு வந்து வாக்குகளை வாங்கிவிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு காணமல் போய்விட்டு அடுத்துவரும் தேர்தலின்போது வரும் அரசியல்வாதியல்ல மனோகணேசன் என்றார்.