பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் அன்றைய அலுவல்கள் நிறைவடைந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை 11ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் மூன்று நாட்கள் (11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், கடைசி நாளில் துணை முதல்வரின் பதிலுரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.