கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கிய குறித்த இளைஞனை பொலிஸார் மற்றும் கடற்படையினர், பிரதேசவாசிகளின் உதவியுடன் இன்று மதியம் சடலமாக மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.