அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பெத்தேஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையில் அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மேரிலாந்து மாகாணத்தில் பெத்தேஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி வெள்ளை மாளிகை மருத்துவர் சியான் கான்லே விடுத்த அறிக்கையில், ‘‘நானும், 11 சிறப்பு மருத்துவ நிபுணர்களும் 72 வயதான ஜனாதிபதிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினோம். 4 மணி நேரம் இந்த பரிசோதனைகள் நடந்தன. அதன் முடிவுகளில் இருந்து, ஜனாதிபதி நல்ல ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தனது பதவிக்காலம் முழுமைக்கும் மட்டுமல்லாது அதையும் கடந்து நலமாக இருப்பார்’’ என கூறினார்.
அதே நேரத்தில் டிரம்பின் எடை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, ரத்த அழுத்த விவரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் டிரம்ப் கொஞ்சம் எடை குறைய வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. அப்போது அவர் 107 கிலோ எடை இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.