எத்தனை முறை பிரதமர் மோடி வந்து சென்றாலும் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது என்று சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா ஆண்டையொட்டி அருந்ததியர் அரசியல் மாநாடு நடந்தது.
மாநாட்டில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாடு நிறைவு பேரூரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அடிதட்டு மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல. அது மோசடி அரசாகும். ஏனென்றால் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் டெல்லியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இது நாட்டிற்கே அவமானம்.
தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்து சென்றாலும், இங்கு அவர்களால் (பா.ஜனதா) காலூன்ற முடியாது. ஏனெனில் அவர்களுக்கு காலே இல்லை. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளார்கள். அது தேர்தலில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் லஞ்சம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சலுகை அளிக்கலாம். ஆனால் உயர் சாதி யினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.