நாடு முழுவதிலும் நிலவும் கழிவுப் பொருள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இருப்பதாகவும் அதற்காக ஏனைய கட்சிகளும் ஒன்றிணைய முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
தூய்மையான நகரம் – சுற்றாடலுக்குப் பொருத்தமான நாடு என்ற தொனிப்பொருளின் கீழ், கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வு காலியில் இன்று இடம்பெற்றது. உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் மத்திய அரசாங்கத்தினால் இதற்காக ஆகக்கூடிய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாடு முழுவதிலும் நிலவும் கழிவுப் பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2015ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம் பல சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்குப் பாரிய சேவையை மேற்கொண்டது.
விசேடமாக தேசியஅரசாங்கம் கிராம மட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் நிலவிய அரசியல் குரோதத்தை தீர்க்க முடிந்ததாகவும் பிரதமர் கூறினார். நாட்டில் நிலவிய பெரும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கு தற்போது ஸ்திரமான நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கழிவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக 92 வாகனங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்காக 72 கோடி 50 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி மாவட்ட செயலகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் புதிய உடற்பயிற்சி மத்திய நிலையமொன்றும் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.