செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா? இல்லையே!
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்து Frankfurt நகரில் நினைவேந்தல் நிகழ்வு 01.10.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் யேர்மனி வாழ் தமிழர்கள் பல்வேறு நகரங்களில் இவ்வகையான நினைவேந்தல் நிகழ்வுகளை செய்தமை குறிப்பிடத்தக்கது.