தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற யூசுப் ரசா கிலானியை லாகூரில் உள்ள விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பயணத்தை ரத்து செய்தனர்.
பாகிஸ்தானில் 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமராக இருந்தவர் யூசுப் ரசா கிலானி. இவர் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு விளம்பர நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூரில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினர்.