அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படுமா? – இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

276 0

தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து வந்த டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து, அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்க, தினகரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டடது. இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தால், டி.டி.வி தினகரன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு கடந்த 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது’ என்ற வாதத்தை முன் வைத்தார். டி.டி.வி தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ‘தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. பொதுவான பெயரும், சின்னமும் இல்லாவிட்டால் நாங்கள் எப்படி அரசியலில் ஈடுபட முடியும். தேர்தல் நெருங்குவதால் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று வாதாடினார். அனைத்து தரப்பினரும், எழுத்துபூர்வமான வாதங்களை 6-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இன்று காலை 10:30 மணி அளவில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தீர்ப்பு வழங்க இருக்கிறது.

Leave a comment