பா.ஜனதாவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை- எல்கே சுதீஷ் தகவல்

409 0

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். #

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இந்த தேர்தலில் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும். மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது.

விஜயகாந்த் வந்த பின்னர்தான் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். அந்த கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a comment