தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை – அமைச்சர் தங்கமணி

250 0

தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வரை வேலை வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a comment