சிலர் தன்னை பற்றி வாட்ஸ் அப்பில் சித்தரித்து அனுப்புவதை பற்றி கவலைப்படவில்லை என்றும், தமிழக மக்களை நம்பித்தான் தாம் அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து, பேசியதாவது:-
சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றை எல்லாம் நான் பல மேடைகளில் பேசியது உண்டு. அந்தத் திருமணங்கள் எவ்வாறு நடக்கும் என்பதையெல்லாம் நான் விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ அதேபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
வைதீக முறையில் நடைபெறக்கூடிய திருமணங்கள் எப்படி நடக்கும் என நான் விவரித்தால், மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசி விட்டாரே என சிலர் வாட்ஸ் அப்பில் ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நாம் தமிழ்நாட்டு மக்களை நம்பித்தான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இனியும் அரசியல் நடத்துவோம். அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அவர்கள் யார் படத்தை தன்னுடைய சட்டப்பையில் வைத்து ஊரை ஏமாற்றி வருகிறார்களோ அவர் கூட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திய பின்னர், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டார். இதனால் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகப்போகிறது, தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். இதுவரைக்கும் அது நடந்ததா என்றால் இல்லை.
ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு இவர்களும் ஒரு மாநாடு என்கிற நாடகத்தை நடத்தினார்கள். முதல் மாநாடு நடத்தி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியாத நிலையில், இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது? என்பது குறித்த புள்ளி விவரங்களுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமென நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரையில் வைக்கவில்லை.
ஜெயலலிதா எப்படி முதல் மாநாட்டை ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து வீண் விளம்பரம் செய்து இரண்டாவது மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அந்த மாநாட்டுக்கு ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கோட் சூட் அணிவித்து கட்டாயப்படுத்தி வரவழைத்து இருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் அதில் அடக்கம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. சட்டமன்றத்தை கூட்டட்டும், ஆதாரத்தோடு அதனைச் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவை விட நாங்கள் அதிக முதலீடு வாங்கி விட்டோம் எனச் சொல்லி, மூன்றரை லட்சம் கோடி முதலீடு வாங்கியிருக்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.
ஆனால், என்னைப் பார்த்து எடப்பாடி கேட்கிறார், இதுவரை மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்றது உண்டா? ஏன் புதிதாக கிராமத்திற்கு செல்கிறார் எனக்கேட்கிறார். நான் போகாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் எல்லாம் அதிக கொடியேற்றிய ஒரு தலைவர் என்றால், அது நம்முடைய தலைவர் கருணாநிதி தான். அதற்கடுத்து யார் என்று கேட்டீர்கள் என்றால், நான் நெஞ்சு நிமிர்த்து சொல்வேன். அவருடைய மகனான நான் தான் இருக்கிறேன் என்று. என்னைப் பார்த்து எடப்பாடி சொல்கிறார் நான் கிராமத்துக்கு சென்று பஞ்சாயத்து செய்கிறேன் என்று, ஆனால், நீங்கள் கமிஷனுக்கு போய் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய நிலைமை.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது. அந்த தேர்தலை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது. நிச்சயம் வந்தே தீரும். அந்தத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, இந்த மதவாதம் பிடித்த பா.ஜ.க. அரசுக்கும், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் அ.தி.மு.க அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகிற வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.