மரணதண்டனை விதிக்கப்பட்டோரின் கோப்புக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிய சான்று என்னிடமுள்ளது!

262 0

நான் சபையை தவறாக வழிநடத்தவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கோப்புக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியதற்கான சான்று என்னிடம் இருக்கின்றது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ஆரம்ப பணி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், 

மரண தண்டனை கைதிகள் தொடர்பாக நான் நேற்று முன்தினம் நீதி அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் பிழைய தகவல்களை முன்வைத்திருக்கின்றார். ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்ததாக தெரிவிக்கப்படும் அந்த அறிக்கைகளில் அவ்வாறான தகவல் இல்லை என குறிப்பிட்டார்.

என்றாலும் குறித்த நேரத்தில் நீதி அமைச்சர் சபையில் இருக்காததால், அதுதொடர்பில் அவருக்கு அறிவித்து, அதுதொடர்பான விளக்கத்தை வழங்குமாறு தெரிவிக்கின்றேன் என சபாநாயகர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சற்று நேரம் சென்றதன் பின்னர் சபைக்குவந்த நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், தயாசிறி ஜயசேகரவின் குற்றச்சாட்டை மறுத்து அவருக்கான விளக்கத்தை சபையில் முன்வைக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) தயாசிறி எம்.பி. என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதுதொடர்பில் நான் தெளிவுபடுத்தி, அதன் கோப்புக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியிருப்பதாக தெரிவித்தேன். ஆனால் நான் சபையில் இல்லாத நேரத்தில் நான் தவறான தகவல்களை தெரிவித்து சபையை தவறாக வழிநடத்தியதாக தயாசிறி எம்.பி. தெரிவித்திருந்தார். அவ்வாறு எந்த தேவையும் எனக்கில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கோப்புகளை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியதாக நான் தெரிவித்தேன். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அதனை அனுப்பினோம். 

அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 48பேரில் 30பேர் மேன் முறையீடு செய்துள்ளனர் 18 பேரின் பெயர்களை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியுமா என்பது தொடர்பில் பரிந்துரை செய்து கடந்த மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பினோம். ஜனாதிபதி செயலத்தில் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்பத்திரமும் என்னிடம் இருக்கின்றது.

அதன் பிரகாரம் மரண தண்டனை நியமிக்கப்பட்ட 18 பேரில் 17பேரின் பெயர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தி அனுப்பியுள்ளது. இன்னும் ஒருவரின் கோப்பு எங்களிடம் இருக்கின்றது. அவர்களில் வெளிநாட்டு முஸ்லிம் நபர்கள் 4 பேரும் சிங்ளவர்கள் 5பேரில் ஆண்கள் 4 பேரும் ஒரு பெண்ணும் தமிழ் இனத்தைச்சேர்தவர்கள் 6 பேர் இருப்பதுடன் இலங்கை முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த 2 பேரும் இருக்கின்றனர்.

எனவே சபையை பிழையாக வழிநடத்திய தாக கூறும் தயாசிறி எம்.பி. கூற்றை முற்றாக நிராகரிக்கின்றேன். நாங்கள் செய்ததைதான் சொல்வோம். மக்களை உசுப்பேத்துவதற்காக எதனையும் தெரிவிக்கமாட்டோம் என்றார்.

Leave a comment