தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தொடர்பான பிரேரணையை இன்று பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை கொண்டுள்ள நிலையில் நேற்று கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது தேசிய அரசாங்க யோசனையை இன்று வியாழக்கிழமை சபையில் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவையை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். இதன் படி தற்போது 30 பேர் கொண்ட அமைச்சரவையை 48 பேர் கொண்ட அமைச்சரவையாக மாற்றவும் தற்போது 40 பேர் கொண்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை 45 பேராக அதிகரிக்கும் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளனர்.
எனினும் கட்சி தலைவர் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த யோசனையை பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்துமே எதிர்த்துள்ளன. தேசிய அரசாங்க யோசனை தவறானது எனவும் ஒரு உறுப்பினர் கொண்ட கட்சியுடன் இணைந்துகொண்டு தவறான வழிநடத்தலை செய்ய ஐக்கிய தேசிய கட்சி முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி ஆகிய சகல கட்சிகளுமே இந்த யோசனையை எதிர்த்துள்ளதுடன் இந்த யோசனை பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறிய வகையில் அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையிலேயே தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.