சார்ள்ஸை தான்தோன்றித்தனமாக பதவி நீக்கம் செய்யவில்லை -சமரவீர

322 0

துறைமுகத்தினுள் செயற்படும் மாபியா  கடத்தல் கும்பல்களை முற்றாக ஒடுக்குவதற்கே சுங்க பணிப்பாளர் நாயகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத தவிர திருமதி  பி.எஸ்.எம். சார்ள்ஸை தான்தோன்றித்தனமாக பதவி நீக்கம் செய்யவில்லை எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, இவ்விடயத்தை எதிர்தரப்பினர் அரசியல்மயப்படுத்தி தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி விட்டனர் எனவும் குறிப்பிட்டார். 

நிதியமைச்சில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அவரது தரப்பினர், சுங்க பணிப்பாளர் நாயகத்தை நிதியமைச்சு நிறைவேற்று அதிகாரத்தை மீறி பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் இச்செயற்பாடு அரசியல் தான்தோன்றித்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும்  குற்றஞ்சாட்டுகின்றனர். 

இவர்கள் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை ஒருபோதும் மறந்து விட கூடாது. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை  முறையற்ற விதத்தில் ஒரு நாள் மாத்திரம் பொய்யாள குற்றங்களை சுமத்தி விசாரணைகளை முன்னெடுத்து தான்தான்றித்தனமாக பதவி நீக்கம் செய்து நீதித்துறை சுதந்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை எவரும் மறந்து விட முடியாது. 

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை நாங்கள் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் விவகாரத்தில் முன்னெடுக்கவில்லை. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனே பதவியில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது என்றார். 

Leave a comment