விரைவில் சுற்றுநிருபம் வெளியிடுவோம் -அகில விராஜ்

271 0

பெற்றோர்கள் பணம்சேர்த்து அதிபர்களுக்கு வழங்கிவருகின்றனர். இதனை தடுப்பதற்கு விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான ஹேஷான் விதானகேவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் 2015 சுற்றுநிருபம் வெளியிட்டோம். இதன் மூலம்  மாணவர்களிடம் பணம் சேர்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.2017 இல்  இந்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டது. அதாவது பணம் அறவிடுவதாயின் தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சினதும் மாகாண பாடசாலையாயின் மாகாண அமைச்சின் செயலாளரினதும் அனுதியை பெறவேண்டும்.

ஆனால் தற்போது பெற்றோர் பணம் சேர்த்து அதிபரிடம் பாடசாலைகளுக்கு வழங்கும் நிலை காணப்படுகிறது.இதனையும் அனுமதிக்க முடியாது. அதிபர்களுக்கு தெரிந்தே இவ்வாறு பணம் சேர்க்கப்படுகிறது.

பெற்றோர் சேர்க்கும் பணத்தை பாடசாலை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது.அதனால் சுற்றுநிருபத்தை மாற்ற இருக்கிறோம்.

அத்துடன் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து செயற்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை தேசிய பாடசாலைகளில் முழுமையாக முன்னெடுக்கப்படுகிறது. 

ஆனால் மாகாண பாடசாலைகளில் இது முழுமையாக செயற்படுத்த எமக்கு தலையிட முடியாதுள்ளது. என்றாலும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க மாகாண சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி நடவக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.

Leave a comment