தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டி உள்ளது.
கடுமையான போக்குவரத்து நெருக்கடி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் வெளியேறும் புகை உள்ளிட்டவற்றால் காற்றில் நச்சு தன்மை கலக்கிறது.
நச்சு துகள்கள் பி.எம்.2.5 எனும் அளவைக் கடந்து அபாயகரமான நிலையில் உள்ளதால் அங்கு உள்ள 41 பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளன. நச்சு காற்றை சுவாசிப்பதால், மூக்குகளில் ரத்த கசிவு, இருமலின் போது ரத்தம் வருவது, கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைவது போன்ற உபாதைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் மூக்கில் ரத்தம் கசிவது மற்றும் ரத்தம் உறைந்த கண்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, காற்றில் மாசுபாட்டில் இருந்து காக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு பள்ளிகளை மூடியும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்தும், தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தியும் அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும், காற்றில் நச்சுத்தன்மையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.