ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டி தீர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அங்குள்ள ராஸ் ஏரி மற்றும் பல்வேறு அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் வெள்ளக்காடாகி இருப்பதால் அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கிப்போயின. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள், பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. வீதிகளில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். முதலைகளை பிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.