தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். #
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதாரண தொண்டராக இருந்த என்னை பெரியார், காமராஜர், மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, சோனியா காந்தியின் வாழ்த்துகளை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துகிற இமாலய பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும், பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
இந்த பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.
எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8-ந் தேதி மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.