ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. மீனாட்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சுவாதி கொலை வழக்கு குற்றவாளியான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 18-ந்தேதி அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை, அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது தந்தை குற்றம்சாட்டினார். ராம்குமார் பிரேத பரிசோதனையில் அரசு டாக்டர்களுடன் தனியார் மருத்துவமனை டாக்டரும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை சென்னை ஐகோர்ட்டில் வைக்கப்பட்டது.
ராம்குமார் தரப்பில் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவினை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி அரசு டாக்டர்கள் 4 பேர் குழுவுடன் சேர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தாவும் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ராயப்பேட்டையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நேற்று காலை 10.30 மணிக்கு நடந்து.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டாக்டர் செல்வகுமார், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர்கள் கே.வி.வினோத், மணிகண்டன், ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் சுதிர்குப்தா தலைமையில் 5 பேர் என மொத்தம் 9 பேர் பிரேத பரிசோதனையை நடத்தினர்.
நீதிபதி தமிழ் செல்வியும் அப்போது உடன் இருந்தார். பிரேத பரிசோதனையை 2 வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. ஒன்றரை மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை நடந்த இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ராம்குமாரின் தந்தை பரமசிவம், வக்கீல் ராம்ராஜ் ஆகியோர் இருந்தனர். ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் மதியம் 1.30 மணியளவில் ராம்குமாரின் உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்து தனியார் அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலம் உடல் செங்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்ட ராம்குமாரின் உடல் நள்ளிரவில் மீனாட்சிபுரம் வந்துவிடும் என எதிர்பாரத்து அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
ஆனால் ராம்குமார் உடல் வரும் வழியில் பல இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஆம்புலன்சை நிறுத்தியதால் உடல் மீனாட்சிபுரத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இன்று காலை 10 மணியளவில் ராம்குமாரின் உடல் மீனாட்சிபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவரது உறவினர்கள், ஊர் பொது மக்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். ராம்குமாரின் உடலை பார்த்து அவரது தாய் புஷ்பம், சகோதரிகள் காளீஸ்வரி, மதுமிதா ஆகியோர் கதறி அழுதனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ராம்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலையில் இருந்து மீனாட்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தென்காசி ஆசாத்நகர், செங்கோட்டை பார்டர், தேன்பொத்தை, கணக்குபிள்ளைவலசை ஆகிய இடங்களில் பேரிகார்டு அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தென்காசி ஏ.எஸ்.பி. சசாங்சாய் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மீனாட்சிபுரத்திற்கு வந்தார். ராம்குமார் உடல், கொண்டு செல்லப்படும் வழி, அடக்கம் செய்யப்படும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
செங்கோட்டை- தென்காசி இடையே போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் இலத்தூர் வழியாக திருப்பி விடப்பட்டன.