பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என ஆயிரம் இயக்கம் பொகவந்தலாவ கெம்பியன் நகரத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தது.
நாட்டின் 71வது சுதந்திர தினத்தில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை போல தன்னுடைய ஊழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கறுப்பு பட்டிகளை அணிந்து கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அத்தோடு முச்சக்கரவண்டிகளில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடி கழட்டப்பட்டு கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
நியாயமான சம்பளத்தை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடதக்கது.