உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

344 0

201610021457573504_tomorrow-last-day-for-nomination-local-body-election_secvpfஉள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டன.

மனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மறுநாள் (4-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 6-ந்தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அன்றைய தினம் மாலையில் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் நாளை மனு தாக்கல் செய்கிறார்கள். 12 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களும் ஏற்கனவே மனுதாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

நாளை நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்கிறார்கள்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள்.

அனைத்து கட்சிகளும் ஒரே நாளில் மனுதாக்கல் செய்வதால் மனுதாக்கல் நடைபெறும் அந்தந்த பகுதி அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மனுக்களை பெறுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் அரசியல் கட்சி சின்னங்களிலும், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல்கள் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையிலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுகிறது. தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாக நிற்கிறது. தே.மு.தி.க., பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியவை ஒரு அணியாக போட்டியிட தீர்மானித்துள்ளன.

இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கான ஓட்டுப்பதிவு மின்னணு எந்திரம் மூலம் நடத்தப்படுகிறது.

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 4 பொறுப்புகளுக்கான தேர்தல் ஓட்டுச் சீட்டு மூலமே நடத்தப்படுகிறது.

மாநில அளவில் ஓட்டு சீட்டு, அதில் உள்ள வாசகங்கள், நிறம் போன்றவை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மாதிரி ஓட்டு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறத்திலும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும் ஓட்டு சீட்டுகள் அச்சிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு எந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச் சீட்டுகள் வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.

தபால் ஓட்டு போடுபவர்கள் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் ஒரு ஓட்டுச் சீட்டும் யூனியன் மற்றும் பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களாக இருந்தால் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு ஓட்டு போட 4 வண்ண வாக்கு சீட்டுகளும் அனுப்பிவைக்கப்படும்.

வருகிற 6-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் ஓட்டு சீட்டுகள் அச்சிடும் பணி தொடங்குகிறது.