மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் அதிக அளவில் தகுதி பெற்று தமிழக டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 26,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 2,500 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 167 நகரங்களில் கடந்த 6-ம் தேதி நடந்தது. இந்த நீட் தேர்வு முடிவுகள் கடந்த 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு 1,200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இந்த நீட் தேர்வில் பொதுப் பிரிவினர்களுக்கு 340 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 295 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 317 மதிப்பெண்ணும் தகுதி பெறுவதற்கான மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் நீட் தேர்வு எழுதிய 1,43,148 பேரில் 79,633 பேர் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு எழுதிய 17,067 பேரில் 11,121 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடுமுழுவதும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 7-ல் ஒருவர் தமிழராக உள்ளார். ஆந்திராவில் 6,323, கேரளாவில் 6,441, கர்நாடகத்தில் 9,219, தெலங்கானாவில் 4,344, குஜராத்தில் 3,646, மகாராஷ்டிராவில் 7,441, உத்திரபிரதேசத்தில் 4,173 பேர் தகுதி பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.