இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.
இந்தியாவின் வற்றாத ஜீவ நதிகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. இதன் முக்கிய பெரிய கிளை நதியான யர்லாங் சாங்கோ சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற திபெத் பீட பூமியில் உள்ள இமயமலையின் ஆங்சி பனி மலையில் உற்பத்தியாகிறது.
அது பிரம்மபுத்திராவுடன் கலந்து இந்தியாவின் அசாம் அருணாசல பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடி வங்காள தேசத்துக்குள் புகுந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்த நிலையில் திபெத்தில் யங்லங் சாங்போ கிளை நதியை மறித்து சீனா மிகப்பெரிய அணையை கட்டுகிறது.அதற்காக நேற்று முன்தினம் திடீரென ஆற்றின் ஓட்டத்தை தடுத்து நிறுத்தியது.
இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் நீர்மின் நிலையம் அமைக்கிறது. ஸிகாஷ் என்ற இடத்தில் ஸிபுகு ஆற்றின் குறுக்கே இந்த நீர்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு ‘லால்கோ’ திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இதன் கட்டுமான பணி தொடங்கியது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
இந்த கிளை நதியை மறித்து சீனா அணை கட்டுவதன் மூலம் பிரம்மபுத்ராவில் நீர்வரத்து மிகவும் குறையும் அதனால் இந்தியாவில் அசாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களும், வங்காள தேசமும் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உரி ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்தியாவுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.