தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று மலையகத்தில் பல இடங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்று கொடுப்பதாக கூறிய அரசியல் தலைவர்கள் கடந்த வாரம் 700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
இந்த சம்பள உயர்வை பார்க்கும்போது வெறுமனே தோட்டத் தொழிலாளர்களுக்கு இருபது ரூபா மாத்திரமே இரண்டு வருடங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உடன்படிக்கையானது தோட்டத் தொழிலாளர்களை முழுக்க முழுக்க காட்டிக்கொடுத்து அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என இந்த எதிர்ப்பு நடக்கும்போது தெரிவிக்கப்பட்டன.
ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் இன்று சத்தியாகிரக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த சத்தியாகிரக போராட்டம் கொழும்பில் தோட்டத் தொழிலாளர்களுக்காக சத்தியாகிரகம் செய்த இளைஞர்களும், மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.
இதன்போது “மலையக மக்களை அடகு வைக்காதே” “கூட்டமைப்பு தலைவர்களை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக உங்கள் கதை என்ன” “அரசு மலையக மக்களின் சம்பள விடயம் தொடர்பாக தலையீடு ஏமாற்ற வேண்டாம்”; போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த சம்பள உயர்வு தொடர்பாக ஆராய்வுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.