ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்கு

328 0

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும நிர்வாகி வேணுகோபால் தூட் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இந்த முறைகேடு தொடர்பாக சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும நிர்வாகி வேணுகோபால் தூட் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்ற சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், இது தொடர்பாக அதிரடி சோதனையும் மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் மேற்படி நபர்கள் மீது அமலாக்கத்துறையும் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் அமலாக்கத்துறையினர், விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

Leave a comment