ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் புனே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.-யை தோற்கடித்து 4-வது வெற்றியை ருசித்தது.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 67-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி அணி, புனே சிட்டியை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட்டுகள் அடிப்பதிலும் இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் போல் செயல்பட்டன. முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. பிற்பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. 55-வது நிமிடத்தில் சென்னை வீரர் சி.கே.வினீத் சூப்பராக கோல் அடித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. புனே அணியின் நட்சத்திர வீரர் மார்செலோ பெரீரா 59 மற்றும் 60-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர சென்னை அணி கடைசி வரை போராடியும் பலன் இல்லை.
முடிவில் புனே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.-யை தோற்கடித்து 4-வது வெற்றியை ருசித்தது. ஐ.எஸ்.எல். வரலாற்றில் 10-வது முறையாக சென்னையுடன் மோதி இருக்கும் புனே அணி அதில் பெற்ற முதல் வெற்றி இது தான்.
இந்த சீசனில் அடிமேல் அடிவாங்கி வரும் சென்னையின் எப்.சி. 14-வது லீக்கில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 11 தோல்வி என்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-ஜாம்ஷெட்பூர் அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.