திருச்சி தொகுதியில் வைகோ போட்டி?

289 0

பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடம்? யார்-யாருக்கு எந்த தொகுதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. என்றாலும் இந்த கூட்டணியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முக்கிய தலைவராக இருக்கிறார். எனவே அவர் விரும்பும் தொகுதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வைகோ 1999-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் போட்டியிடவில்லை. 2009-ல் சிவகாசியிலும், 2014-ல் விருதுநகரிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படு கிறது. 2004-ல் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க இருந்தது. அப்போது திருச்சி தொகுதியில் போட்டியிட்ட ம.தி.முக. வேட்பாளர் எல்.கணேசன் 2 லட்சத்து 24 ஆயிரம் ஓட்டுகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார்.

எனவே இந்த முறை திருச்சி தொகுதியை வைகோ குறி வைத்துள்ளார். அவருக்கு திருச்சி தொகுதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ம.தி.மு.க.வினர் இப்போதே அந்த தொகுதியில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கம் தேன் தமிழ் திவ்யபிரபந்தம் என்ற நிகழ்ச்சியில் வைகோ பங்கேற்றார். தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி, திருச்சி தேசிய கல்லூரி, திருச்சி விடுதலை சிறுத்தைகள் மாநாடு, மொழிப்போர் தியாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

புதுக்கோட்டை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற வைகோ வருகிற 8-ந்தேதி திருச்சியில் நடைபெறும் ம.தி.மு.க. உலக மகளிர் தின மாநாட்டில் கலந்து கொள்கிறார். 12-ந்தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரி விழாவிலும், மார்ச் 22-ந்தேதி திருச்சியில் நடைபெறும் ம.தி.மு.க. நிதி அளிப்பு கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

தொடர்ந்து வைகோ திருச்சி பகுதியிலேயே முகாமிட்டு வருவது அவர் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்வதாக ம.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் வைகோ போட்டியிடுவது குறித்து, சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு வந்தபோது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ பேசியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தகவல்களால் ம.தி.மு.க.வினர் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தி.மு.க. தரப்பில் இதுபற்றி கூறும்போது, வைகோவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் தொகுதி பங்கீட்டின்போது தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வைகோ நட்சத்திர பேச்சாளர். எனவே அவரை தேர்தல் பிரசாரத்துக்கு முழுமையாக பயன்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆவார் என்றும் ஒரு தகவல் உள்ளது. எனவே வைகோ திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குவாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a comment