இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்டு செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் – கவுசல்யா காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சங்கர் உடுமலை நகரில் படுகொலை செய்யப்பட்டார். காயங்களுடன் கவுசல்யா உயிர்தப்பினார்.
இதையடுத்து கவுசல்யா சங்கர் சமூகநீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்.
சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து குடிசை வீடாக இருந்த அவரது வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்டது. சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்ற வாலிபரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்காக எதிராக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கவுசல்யாவை சஸ்பெண்டு செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டது.