சின்னதம்பி யானையை கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்ன தம்பி யானை டாப்சிலிப் வனப் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை தற்போது பல கிலோமீட்டர் தூரம் கடந்து பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில் வலம் வருகிறது. இந்த யானையை கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.