அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நியூ ஜெர்சி எம்பி கோரி புக்கரும் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த கட்சி தயாராகி வருகிறது.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக எம்பிக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாநிலத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானவர். கலிபோர்னியாவில் அரசு வக்கீலாக பதவி வகித்த கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரானவர். இதேபோல் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண்ணும் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரன், நியூயார்க் செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட், ஜூலியன் கேஸ்ட்ரா உள்ளிட்ட மேலும் சிலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது நியூ ஜெர்சி செனட்டரான கோரி புக்கரும் (வயது 49) இணைந்துள்ளார். அத்துடன், வீடியோ மூலம் தனது பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார். அந்த வீடியோவில், தான் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை மற்றும் தனது அரசியல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார்.