மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் ரூ.20 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு ராஜகோபுரம் வழியாக சாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ளது வீரவசந்தராயர் மண்டபம். இந்த மண்டபத்தின் இருபுறங்களிலும் கடைகள் இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி இரவு கோவில் அடைக்கப்பட்ட பிறகு அங்குள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் அதன் அருகே உள்ள ஆயிரங்கால் மண்டபம் பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. எனவே அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் பூட்டப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த அனைத்து கடைகளும் சீரமைப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டன. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.
கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், தொல்லியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள், ஸ்தபதிகள் என 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து வீரவசந்தராயர் மண்டபத்தின் வடக்கு பகுதியில் சேதம் அடைந்த பகுதிகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி இடிபாடுகள் அகற்றப்பட்டு தற்போது அந்த பகுதி வெட்டவெளியாக காட்சி அளிக்கிறது. புனரமைப்பு பணிக்காக ராசிபுரம், நாமக்கல் ஆகிய பகுதியில் உள்ள கற்களின் மாதிரிகள் எடுத்து அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதில் நாமக்கல் அருகே உள்ள பட்டினம் என்ற பகுதியில் உள்ள கற்கள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருக்கும் கற்களை வெட்டி எடுக்க கோவில் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் தீ விபத்து நடந்து ஓராண்டாகியும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. இதனால் சாமி சன்னதி ராஜகோபுரம் பூட்டிய நிலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில் உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் வருகிற 2020-21 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்த வேண்டியது வரும். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தின் பகுதியை ரூ.20 கோடி மதிப்பில் புனரமைக்க உள்ளதாக தெரியவருகிறது. கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளித்த உடன் மண்டபம் சீரமைக்கும் பணி தொடங்கி விடும். இந்த பணிகள் முடிய குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். எனவே பணி முடிந்த உடன் கோவில் கும்பாபிஷேகத்தையும் சேர்த்து நடத்த திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.