நாட்டைப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே மைத்திரி-ரணில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர முயற்சிசெய்வதாக மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ் பேரணிக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கூட்டு எதிரணியினரால், தெற்கில் பேரணிகள், மற்றும் மக்கள் கூட்டங்களை நடாத்தவுள்ளதாக கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.
‘போராட்டத்திற்கு வலுவூட்டும் புதிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் இரத்தினபுரி நகரில் இந்த மாதம் நடாத்தவுள்ள பொதுக் கூட்டம் தொடர்பாக கூட்டு எதிரணியினரால் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் சந்திப்பொன்று கொழும்பு, நாவல பிரதேசத்தில் நடைபெற்றது.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி,
எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ள கூட்டத்திற்கு இப்போதிருந்தே மக்களைத் திரட்டும் பணிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கும், இனவாதிகளுக்கும் இந்த நாட்டை பிரித்துக் கொடுப்பதாகவும், இராணுவத்திரை சிறைவைப்போம் போன்ற பலவிதமான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. இன்று எதிர்கட்சி மீது அடக்குமுறையை கையாண்டு அதனூடாக புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கும், மேற்குலகத்திற்கும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எத்தனிக்கின்றது.
இதனால்தான் எதிர்கட்சியை எழும்பவிடாது செய்து பலவித அடக்குமுறைகளை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் நோக்கில் மக்களது கருத்துக் கணிப்பிற்காக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றோம். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு பதிலளிக்கும் வகையிலும், இனவாதத்திற்கு பதிலளிக்கும் வகையிலும் மக்கள் கூட்டமொன்றை நடத்துவதற்காக மக்களைத் தயார்படுத்த ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.
போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தியின் தேசிய கூட்டம் என நாங்கள் இதற்கு பெயர் சூட்டியுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக நாங்கள் செய்யும் பிரதான நிகழ்வாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இரத்தினபுரி நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் கூட்டத்தை குறிப்பிட முடியும். இந்த அரசாங்கத்தை கவிழ்த்து, நாட்டிற்குத் தேவையானதும், தேசப்பற்றுள்ள சிறந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு இந்நாட்டிலுள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர் – என்றார்.