மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்!

444 18

கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அந்த கால கட்டத்தில் மோசூல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அந்த நகரை மீட்பதற்காக அமெரிகாவின் தலைமையிலான சர்வதேச படையணியினர் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

எப்படியிருப்பினும், தமது படையணியின் வான் தாக்குதல் காரணமாகத்தான் இந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை உறுதியாக கூறமுடியாது என அவுஸ்திரேலிய வான் படை அதிகாரி எயார் மாஷல் மெல் ஹப்வீல்ட் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கீழ் செயல்பட்ட வேறு நாடொன்றின் வான்தாக்குதலாக கூட இருக்கலாம் என தெரிவித்த அவர், அதனை உறுதியாக குறிப்பிட்டு கூற முடியாது என தெரிவித்தார்.

அந்த நகரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், பல நாடுகளின் வான்படையினர் ஒரே நேரத்தில் அந்த பிராந்தியத்தில் வான் தாக்குதலை மேற்கொண்டு வந்ததாகவும் அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.

எந்த நாட்டு வான்படையாக இருந்தாலும், சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு அவுஸ்திரேலியா தமது ஆழ்ந்த கவலையை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி, மோசூல் நகரை கைப்பற்றுவதற்காக முழு அளவிலான தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளை, ஈராக்கிய தரைப்படையின் வேண்டுகோளுக்கு அமைய அவுஸ்திரேலிய எப்.ஏ-18 எப் சுப்பர் ஹோனற்ஸ் ரக குண்டு வீச்சு வாநூர்திகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வான் தாக்குதலின் பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து தகவல்கள் உடனடியாக வெளியாகியிருக்கவில்லை.

பின்னர், வான் தாக்குதல்களை கண்காணிக்கும் தொண்டர் அமைப்பான ‘எயார் வார்ஸ்’பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்த தகவலை வெளியிட்டது.

18 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 34 பொது மக்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அமெரிக்க தலைமையிலான சர்வதேச படையினர் ஈராக் மற்றும் சிரியாவில் 2014ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது ஆயிரத்து 190 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூட்டுப்படையணியினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment