தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழ்த் தலைமைகளின் பதில் என்ன?

425 0

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம், புதிய கட்டத்தை அடைந்த போதும், சமரச அரசியல் அவர்களை இன்னொரு முறை ஏய்த்திருக்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகள், ஆண்டாண்டுகளாக மறுக்கப்பட்டு வருகின்றன.   

 இலங்கையில் மிக நீண்டகாலமாக ஒடுக்கப்படும் சமூகங்களில், மலையகத் தமிழர்கள் முதன்மையானவர்கள். வடக்கு-கிழக்கை மய்யமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தொடர்ந்து நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்பில், என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், அவர்கள், யாருடைய பக்கம் நிற்கிறார்கள்? இவை கேட்க வேண்டிய வினாக்கள்.  

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பற்றி, அடிக்கடி பேசப்படுகிறது. ஒற்றுமையைக் கோருவோர் இலங்கைப் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார்களா, சம்பள உயர்வுப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்கள் காக்கும் மௌனம், சொல்லும் செய்தி என்ன என்பன, நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியன.   

மலையகத் தமிழ்ச் சமூகம், கொலனியத்தினதும் பேரினவாதத்தினதும் வர்க்க ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்து, தனது 200 வருடகால வரலாற்றைப் பறிகொடுத்தது.   

இந்தியாவின் ஊக்குவிப்போடு உருவான ‘இலங்கை, இந்திய காங்கிரஸ்’ சுதந்திரத்துக்குப் பின்னர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்’ என்ற பெயருடன், வர்க்க ஒடுக்குமுறையை, மலையகத்தில் நிலைநாட்ட உதவியது.   

அந்தப் பிற்போக்குச் சக்தியின் மரபில் வந்த ஏனைய அரசியல் கட்சிகளும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க, எவ்வித கொள்கையையும் கொண்டிருக்கவில்லை. அதன் முழு விளைவை இன்று காண்கின்றோம்.   

 இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே ‘மீட்பர்’களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல், மேட்டுக்குடி ‘மேய்ப்பர்’களின் அரசியல் இருந்து வந்தது.   

சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் உரையாற்றி, வென்று தரும் தலைவர்களை நம்பி இருந்த சமூகம், பிறகு சத்தியாக்கிரகம் செய்து, சமஷ்டி பெற்றுத்தருவோம் என்று சொன்ன அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி, நிறையப் பேசப்பட்டது.  

ஆனாலும், தமிழரைத் தமிழர், சாதியின் பேராலும் வம்சாவழியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிப்பது பற்றிக் கண்டும் காணாமலே, தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன. இப்போது, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது காட்டும் மௌனம், அதன் தொடர்ச்சியேயாகும்.  

முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தவர்கள், “தமிழ் மக்களைப் பிளக்கப் பார்க்கிறார்கள்” என்று கண்டிக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டியோ, அந்த அடிப்படையில் அமைந்த தமிழீழமோ, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்கு, எந்த வகையில் தீர்வு வழங்கும் என்பது பற்றி, எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.   

தமிழ்த் தேசியவாதத்தின் சுயநல அரசியல், தமிழ்பேசும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தை என்றுமே கொண்டிருக்கவில்லை; இனியும் கொண்டிராது.   

ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினமொன்று, தனது அடிப்படைச் சம்பள உரிமைகளுக்காகப் போராடுகிறபோது, அதை ஆதரிக்கத் தயங்கும் இன்னொரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினம், தனது போராட்டத்தில் அனைத்துச் சிறுபான்மையினரிடமும் தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கோருவது எவ்வாறு நியாயமாகும்? தமிழ்த் தேசியவாதம் இன்றும் அத்தவறான திசையிலேயே பயணிக்கிறது.   

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர், பிரதிநிதித்துவப்படுத்துவது மக்களை அன்றி, அதிகார வர்க்கத்தின் கரங்களையும் அதன் சேவகர்களையுமேயாகும்.   

சம்பளப் போராட்டத்தில், தமிழ்த் தேசியத் தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரதும் மௌனம், அதை மீண்டுமொருமுறை காட்டுகிறது.   

Leave a comment