ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு, அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கென ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதியிடம் கையளிப்பட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதி நிலைமைகளை மறுசீரமைத்தல், நிறுவனத்தின் கட்டமையை மறுசீரமைத்தலின் கீழ் சுதந்திரமான நிர்வாக முகாமைத்துவத்தை ஏற்படுத்தல் மற்றும் வழுவான சட்ட கட்டமைப்புக்களை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பயன் உறுதிமிக்க தந்திரோபாய திட்டங்களை உறுவாக்குதல், வர்த்தக செயற்பாட்டு மாதிரியை மறுசீரமைத்தல், மனித வளத்தை மறுசீரமைத்தல், சுயாதீன கொள்வனவு செயன்முறையை மறுசீரமைத்தல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்த நிறுவன செயற்திறனை அதிகரித்தல் நடவடிக்கைகளுக்கான உபாயங்கள் இந்த பரிந்துரைகளில் உள்ளடங்குகின்றன.
இதற்கு மேலதிகமாக இந்த நிறுவனத்தினை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டுமானால் ஒப்பந்தங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் மூலதனத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளை செய்யவேண்டும்.
மேலும நிறுவனத்தின் தரத்தை பாதிக்காத வகையில் புதிய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயன்முறைகளை ஆரம்பிக்க வேண்டும். இவை குறித்த தெளிவுப்படுத்தல்கள் ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு வாரத்தில் இந்த அறிக்கை தொடர்பான விபரங்களை தொடர்புபட்ட அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிபிட்டார்.