‘மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை, உருவாக்கியே காட்டுவோம்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
தன் கட்சியினருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: கிராம சபை கூட்டத்தில், மக்களை காணும்போது, எனக்கு கருணாநிதி தான்நினைவுக்கு வருகிறார். மக்களும், என்னை பார்க்கும் போதும், பேசும் போதும், கருணாநிதி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். மறைந்தும், மக்களின் மனங்களில், அவர் வாழ்கிறார்.
கருணாநிதி, ஆட்சிக் காலத்தில், கிராம மக்களின் நலன் கருதி, அண்ணா
மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார். நகரங்களும், மாநகரங்களும் மேம்படுத்தப்பட்டன. மின்சாரம், குடிநீர், குடியிருப்பு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு என, அனைத்து விதமான கட்டமைப்புகளும் உள்ள கிராமங்களை உருவாக்கியவர், கருணாநிதி.
அந்த பொற்கால ஆட்சியை, தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அதை, ஜனநாயக வழியில் அமைக்க வேண்டிய கடமை, தி.மு.க.,வுக்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை, உருவாக்கியே காட்டுவோம். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
கல்விக்கடன் உறுதி
தர்மபுரிமாவட்டம் அரூர் சட்டசபை தொகுதி செட்ரப்பட்டி பஞ்சாயத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அரூர் தொகுதிக்கு ஒராண்டாக எம்.எல்.ஏ. இல்லாததால், உள்ளூர்பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.
மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி வந்தவுடன் கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என உறுதியளிக்கிறேன். ஜெ., யால் பலன் பெற்றவர்கள், அவர் மறைவுக்கு இதுவரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.