ஞானசார தேரர் சுதந்திர தினத்தில் விடுதலை செய்யப்படுவார்- சிங்கள ராவய

16611 0

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தோம். மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தோம். ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் அதிக ஆர்வம் காட்டினார்.

எப்போது விடுதலையாகும் எனக் கூற முடியாவிட்டாலும், தேரருக்கு விடுதலை வழங்கப்படும் என ஜனாதிபதி எம்மிடம் கூறினார். எமக்கு கிடைக்கும் தகவல்களுக்க அமைய எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேரருக்கு விடுதலை கிடைக்கும் என நம்புகின்றோம் எனவும் சுதந்த தேரர் மேலும் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்கள் வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றம் தேரர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை விதித்தது. தேரரின் பெயரில் ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தேரரின் விடுதலையில் அனைவரும் அதிக அக்கரை காட்டிவருகின்றனர்.

கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிய வன்முறைகளுக்கு மூல கர்த்தாவாக எல்லோராலும் விரல் நீட்டப்பட்டவரும் குறித்த தேரர் என்பது மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

முஸ்லிம் சமூகத்துக்கு தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி வீசியவரும் பெரும்பான்மையினரின் மத்தியில் முஸ்லிம்களை கேவலமாக சித்தரித்தவரும் இந்த தேரர் என்பது கடந்த கால ஊடக காட்சிகள் மறுக்க முடியாத சான்றுகள் என்று கூறினால் யாரும் மறுக்க மாட்டார்கள். இப்படியான ஒருவரா இன்று தேச பக்தராக முத்திரை குத்தப்படுகின்றார் என்ற கேள்வி, நியாயமாக சிந்திக்கும் அனைவரிடத்திலும் எழுகின்றது என்பது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வசைபாடுவதை மீண்டும் தூண்டி விடுவதற்கு அரசியல் ரீதியில் அரங்கேற்றப்படும் ஒரு நாடகமே தேரரின் விடுதலை என மேஜர் அஜித் பிரசன்ன அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment