தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடி வந்த திருடனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்மோட்டரை ஒருவர் களவாட முற்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் தகவல் கொடுத்ததையடுத்து மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசன் தலைமையிலான புலனாய்வு அணியினர் குறித்த கொள்ளையரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.
கைதானவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குள் இந்த மாதம் மட்டும் ஆறு மின்மோட்டர்களை திருடி யாழ்ப்பாணத்தில் உள்ள மின் மோட்டார் திருத்தும் நிலையத்தில் விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து துரிதமாக செயற்பட்ட குற்றப்புலனாய்வு பொலிஸார் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டர் திருத்தும் கடை உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது தான் அவ்வாறு களவாடப்பட்ட மோட்டர் எதனையும் வாங்குவதில்லை என பொலிஸாரோடு முரண்பட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கமெராக்களை பொலிஸார் ஆராய்ந்த போது குறித்த கடை உரிமையாளர் தனது கடைக்கு வெளியே சற்று தூரத்தில் வைத்து மின் மோட்டர்களை கொள்வனவு செய்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொள்ளையிட்டு விற்கப்பட்ட ஆறு மின் மோட்டர்களையும் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மோட்டர் திருட்டு சந்தேகநபர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் திருடிய மோட்டர்களை மூவாயிரம் ரூபாவிற்கே விற்பனை செய்துவந்துள்ளதாகவும் மாவட்ட குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.