13 வருடக் கட்டாய கல்வி திட்டம் தெரிவு செய்யப்பட்ட பாடாசலைகளில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டி கனதுல்ல தர்மராஜ கல்லூரியில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில்பயிற்சி கல்வி பயின்றோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெளிநாடுகளில் தொழில்பயிற்சி கல்வி பயின்றோருக்கு அதிக சம்பளமும் கிடைக்கின்றது.. ஆகவே தொழில்பயிற்சி கல்வி ஊக்குவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
உயர் தர மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான டெப் கணினிகளை இவ்வருடம் வழங்குவோம். இதன்போது ஆசிரியர்கள் இல்லாத போது இணைத்தளங்களின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
டெப் கணினியை பயன்படுத்தி பரீட்சைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்குத் தேவையான பாடநெறிகள் தொடர்பாகப் பிரத்தியேக வகுப்புகளைப் பாடசாலைகளில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
உயர்தர மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் பாடபுத்தகங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி வழங்கியதன் பின்னர் உயர் தர பாடத்துறை சார்ந்த பாட புத்தகங்களை தயாரித்து டெப் கணினி உட்செலுத்துமாறு பரீட்சை ஆணையாளரிடம் கோரியுள்ளேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.