பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னரே அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வும் நியாயமானது என்பதாலும் இந்தத் தொகைக்காக மக்களும் தனது விருப்பத்தினை வெளியிட்டதாலேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் தெரிவித்தார்.
இந்தத் தொகை திருப்தியாக இல்லையென சிலர் கருதுவார்களானால் அவர்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையலுவலத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதே வேளை இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வடிவேல் சுரேஸ் கருத்து வெளியிடுகையில்,
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டிய நிலுவை சம்பளமும் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் தற்போதைய ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை மாதத்துக்கு ஒருமுறை பெருந்தோட்ட கம்பனிகளிகளுடன் கலந்தரையாடல்களையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடன் காலங்களில் தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என்றார். Share