‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு மீது ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

270 0

தமிழக அரசுக்கு எதிராக அப்பாவி ஆசிரியர்கள், ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூண்டுகிறார்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு உள்பட 10 மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் ‘ஜாக்டோ-ஜியோ’ கூட்டமைப்பு தலைவர்கள், அரசு பணியில் இருக்கும் அப்பாவி ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம்.
கோரிக்கைகள்
‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பினரின் அவதூறு பேச்சை நம்பி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அப்பாவி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.


பழைய ஓய்வூதிய திட்டம், சிறப்பு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய உயர்வு உள்பட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


‘ஜாக்டோ-ஜியோ’ கூட்டமைப்பை தலைமை தாங்கி நடத்துபவர்கள் அரசு பணியில் இல்லாதவர்கள். இவர்கள் அரசு பணியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் பிரச்சினைகள் ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் தலைமையில் செயல்படும் ஆசிரியர் சங்கங்களின் பதிவையும், அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment