வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

259 0

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வசிக்கும் ஆசிரியர்களும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. தமிழக அரசும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை மும்முரம் காட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பாக, பணிக்கு திரும்பவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் அ.கருப்பசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் 22-ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கற்பித்தல் பணி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு 23-ந் தேதி வழங்கிய இடைக்கால ஆணையில், வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக 28-ந்தேதிக்குள் (இன்று) பணிக்கு திரும்பவேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.


28-ந்தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் எனவும், அவ்வாறு பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் எந்தவித துறை நடவடிக்கையும் இன்றி அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணி புரியலாம். இதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணி இடங்கள் காலிப் பணியிடங்களாக கருதப்பட்டு, உத்தேச காலிப் பணி இட பட்டியல் தயார் செய்யப்படவேண்டும்.


இந்த பட்டியலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


28-ந்தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர், குறிப்பிடப்பட்ட காலக் கெடுவுக்குள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் பணியில் சேர வரும்போது, நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அதிகாரி, வருவாய் மாவட்ட அளவிலான ஆசிரியர் காலிப் பணி இடங்களில் ஏதேனும் காலிப் பணி இடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்டு பணிபுரிய ஆணை வழங்கவேண்டும்.


எனவே, மாணவர்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் 28-ந்தேதிக்குள் தவறாது பணிக்கு திரும்பவேண்டும் என உரிய அறிவுரைகள் வழங்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசு விதிகளின்படி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பணியாளரை மீண்டும் அதே பணி இடத்தில், நியமிக்கவேண்டியது இல்லை. எனவே இன்று பணிக்கு வராத ஆசிரியர் பணி இடங்கள் காலியாக கணக்கிடப்பட்டால், அவர்கள் வேறு பள்ளியில் உள்ள காலி பணி இடத்துக்கு துறை அதிகாரியின் நடவடிக்கையின் பேரிலே நியமிக்கப்படுவார்கள் என்பது அரசு விதியாகும். இதன்படி இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணி இடம் காலியாக கருதப்பட்டால், அவர்கள் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment