பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் (காணொளி)

456 0

up-country

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

 
எனினும், 17 மாதங்கள் கடந்துள்ள போதிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இன்று வரை அதிகரிக்கப்படவில்லை.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற 9ஆவது சுற்று பேச்சுவார்த்தையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோல்வியடைந்திருந்தது.
இந்த நிலையில், மலையகத்தில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.

 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உடனடியாக அதிகரித்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு அங்கமாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணப்படுகின்ற 450 ரூபா நாளாந்த சம்பளத்தை, ஆகக்குறைந்தது 650 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் வழங்கியிருந்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.