சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு புதிய பெயர் ‘வந்தே பாரத்’

382 0

சென்னையில் தயாரான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்பட இருக்கிறது. 

என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டது. பதினெட்டே மாதங்களில் தயார் செய்யப்பட்டதால் இந்த அதிவேக ரெயிலுக்கு, ‘ரெயில் 18’ என பெயர் வந்தது .

ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில் 18’ கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மேலும் பல்வேறு அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

‘ரெயில் 18’ இன்று முதல் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும். நாடு முழுவதும் பொதுமக்கள் எண்ணற்ற பெயர்களை சிபாரிசு செய்தனர். ஆனால் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்பதைதான் முடிவு செய்தோம்.

முற்றிலும் இந்தியாவில், இந்திய பொறியாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில், உலகத்தரம் வாய்ந்த ரெயில்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரெயிலை டெல்லி-வாரணாசி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ரெயில் சேவை தொடங்கும்.

இதனை கொடியசைத்து தொடங்கி வைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment