அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நடத்தி வரும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், அதைத் தீர்ப்பதற்கு பதிலாக தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் நீடிப்பது எந்தத் தரப்புக்கும் நன்மை பயக்காது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் அப்பாவி பொதுமக்களும், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கைகளை, அரசு கைவிட வேண்டும். அவர்களை திறந்த மனதுடன் அழைத்துப் பேசி, போராட்டத்திற்கு தீர்வு கண்டு, முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைக் கருத்தில் கொண்டும், அவர்களின் தொடர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளார்.